Wednesday, March 30, 2016

அஷ்டமி நவமியில் எந்த காரியமும் துவங்க கூடாது ???

அஷ்டமி நவமியில் எந்த காரியமும் துவங்க கூடாது என்று சொல்வது எதனால் ?இறைவன் படைப்பில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தானே.
ஒரு அன்பரின் அவசியமான கேள்வி ...
இன்று எல்லோரிடமும் பேசப்படும் இந்த மாதிரியான நம்பிக்கைகள் பல உண்டு ,
என் வீட்டில் அழகான சிவபெருமான் தனித்து இருக்கும் படம் உண்டு ,
தொழில் செய்யும் இடத்தில் தியான நிலையில் சிவபெருமான் படம் உண்டு ,
என் மாமா என்னை பார்க்க வரும் பொது எல்லாம் சிவ ரூபம் கோவிலுக்கு
மட்டும் தான் விளக்கி விடு என்பார் .
சில நபர்கள் குழல் ஊதும் கண்ணன் வீட்டிற்க்கு ஆகாது ,
நடராஜர் உருவம் அல்லது சிலை குடும்பத்திற்கு ஆகாது ,
அமர்ந்த லக்ஷ்மி செல்வம் சேராது ,
இப்படி பலவரியான நம்பிக்கைகளை சொல்வது உண்டு ,
இவைகள் எந்த வகையில் உண்மை என்று யாரும் சிந்திப்பது இல்லை
பொருளாதாரம் மற்றும் தேவைகள் தடை படகூடாது என்று அனபர்கள் அஞ்சி இந்த நம்பிகைகளை கடைபிடிகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும் .
அஷ்டமியில் செய்ய கூடாதது பற்றி தெரிந்து கொள்ளும் முன் அஷ்டமியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் .
அஷ்டமி என்பது ஒரு திதி .
திதி என்பது சூரியன்,சந்திரன்,பூமி இவர்களுக்குள் உண்டான இடைவெளி. விளக்கமாக புரிந்து கொள்ள
ஒரு மாதத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.
பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் மொழி கொண்டு இருப்பதால் நமக்கு சரிவர புரிவது இல்லை ,
நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று புரிந்து கொள்ளல் வேண்டும் ..
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச்சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று .
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் ஐந்து எனப்பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவது.
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறுவது .
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து .தச அவதாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் சொல்வது உண்டு .
11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடுதஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும்.
இது தான் திதிகளை பிரித்து சொல்லும் முறை .
மனிதனின் ஆன்மாவுக்கும் விண்ணுலக நிகழ்வளுக்கும் தொடர்பு உண்டு இதை சித்தர்கள் அண்டமே பிண்டம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சொல்கிறார்கள் .
ஒரு ஒரு தித்திக்கும் நம் ஆன்மா தொடர்ப்பு கொள்கிறது ,அமாவசை தர்ப்பணம் ,பௌர்ணமி தரிசனம் ,மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம்
திதியுடன் சேரும்பொழுது தெய்வத்தை அடைகிறது .
தேய் பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் .
இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை
அழிவில்லா பொருளை ,ஆன்ம சாந்தியை ,தரும் சனி தேவர் பணிந்தார் .
சோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது ,
வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம் )தரும் தன்மை உடையது என்றும் ,
வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது .
பொதுவாக அஷ்டமி என்றால் கம்சனை வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும் ,தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர் .
சுவடிகளில் அகத்தியர் சொல்வது 108 அஷ்டமிக்கு(வளர்பிறை /தேய்பிறை ) அம்மை அப்பனை தரிசனம் செய்வதவர்களை சனியும் அஷ்டம விதியும் விலகி செல்லும் என்று சொல்கிறார் .
சனியின் சாபம் ,கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கிறது ,
சிலருக்கு இரவு துக்கம் கெடுகிறது ,
சிலருக்கு காரிய தடைகள் வருகிறது என்று நான் கவனித்து பார்த்த பொழுது புரிந்தது .
இங்கே ஒரு கேள்வி அஷ்டமியில் என்ன காரியம் செய்யலாம் ?
சோதிட நூல்கள் சொல்கிறது ...
அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி அதனால் சண்டை துவங்க (போர்)காவல் துறைக்கு செல்ல ,
தீய செயல்களை தடுக்க ஹோமம் ,பூசைகள் செய்வது ,கடன் தொகையை அடைக்க மற்றும் தீய
செயல்கள் துவங்க அஷ்டமி திதி பயன்படும் ,
இதை மையமாக வைத்து சோதிடர்கள் நல்ல காரியம்களை அஷ்டமியில் துவங்க வேண்டாம் என்பார்கள் .
நவமி திதி சுப திதி --சரஸ்வதி தேவி ஹயக்ரீவரை குருவாக ஏற்ற திதி ,
வெள்ளியுடன் சேரும் நவமியில் சரஸ்வதி மிகவும் பலம் கொண்டு விளங்குகிறாள் என்று நூல்கள் சொல்கிறது ...
அவசியமாக அஷ்டமியில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் ,பயணம் செல்லவேண்டும் என்றாலும்
விநாயகர்/துர்க்கை பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து பூசை செய்து அதை கைகளில் வைத்து கொண்டு செயலில் இறங்கலாம் .
செயல் முடிந்தவுடன் அதை ஓடும் நீரில் சேர்த்துவிடவேண்டும்.
தகவல் எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்
நன்றி ..

ராகு காலம் எம கண்ட காலம்

ராகு காலம் எம கண்ட காலம் என்பது என்ன ?இவைகளின் பயன் என்ன ?
இன்று சோதிட நம்பிக்கை உள்ளவர்கள் அல்லாது எல்லோராலும் பேசப்படும் ஒரு வார்த்தை ராகு காலம் இல்லாத நேரத்தில் ஒரு காரியத்தை துவங்கலாம் என்ற எண்ணம் .
இவைகளை பற்றி தான் இந்த பதிவு ..
முதலில் நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் .
சோதிட நூல்களில் சில குறிப்புகளை சொல்கிறது
பூமி ,சூரியன் ,சந்திரன் இவர்களின் சுழற்சி தொடர்பு தான் வருடம்,
திங்கள் ,திதி,கிழமை ,யோகம்
கர்ணம் , ,நாழிகை என்ற கணக்குகள் சொல்லி இவைகளை வைத்து
சில குறிப்புகளை நமக்கு தந்து உள்ளது என்று நாம் அறிந்ததே .
இதை போல 7 கோள்கள் தான் முதலில் 12 வீடுகளில் பிரித்து அமைக்கப்பட்டது (இது சோதிடம் பயில்பவர்களுக்கு புலப்படும் )
சிவ பெருமானின் ஆசியால் ராகுவும் ,கணபதியின் ஆசியால் கேதுவும்
இவர்களுடன் சுழற்சி முறையில் எந்த வீட்டிலும் அமரலாம் தனதாக்கி கொள்ளலாம் என்று கொடுக்க பட்டது .
இப்படி இவர்களுக்கு வகுத்து கொடுக்க பட்டது 3+3 நட்சத்திரம் ,
அதாவது கேதுவுக்கு 3,ராகுவுக்கு 3,
இதை போல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் வழக்கில் பயன்படுத்தும் சொல் ,
ஆனால் சோதிட நூல்கள் சொல்வது
60 விநாழிகை--1 நாழிகை
2.5 நாழிகை -- 1 மணிநேரம்
12 நாழிகை -- 1 பகல்/1 இரவு
24 நாழிகை -- 1 நாள்
இதில் சூரிய உதயமாகும் கிழமை நாளில் துவங்கும் முதல் 1.25 நாழிகையை ஆண் காலம் என்றும் அடுத்த 1.25 நாழிகையை பெண் காலம்
என்றும் வகுத்து காலத்தின் அடித்தளமாக வைத்து உள்ளார்கள் .
எளிமையாக ...
ஞாயறுயன்று காலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஆண்காலம் பிறகு
6.30 --7.00 மணிவரை பெண்காலம்.
ரிஷிகள் ,சித்தர்கள் , அல்லது ஒரு மந்திரவாதி ஆண்காலத்தில் தான் மந்திர பிரதிஷ்டை ,அல்லது வகுப்புகள் துவங்குவார்கள் .
ஆண்காலத்தில் துவங்கும் மந்திரம் உச்சரிப்பு சித்தியாகும் என்பது இவர்கள் தந்த நூல்கள் சொல்கிறது .
சோதிடர்களிடம் ஒரு குழந்தை பிறந்து உள்ளது என்று குறிப்பு சொன்னால்
அவர் உடனே ஆண்காலத்தில் பிறந்த சிசு /பெண்காலத்தில் பிறந்த சிசு
என்று கவனித்து பிரித்து கணித்து விடுவார் ,இன்று இதை பற்றி யாரும் அறிந்து இருக்க வில்லை .
என் வாழ்வில் நடந்த சம்பவம் ,
ஆண் குழந்தை பிறந்த நேரம் சரியாக 10 .43காலை -என்று மருத்துவர்
எங்களிடம் சொன்ன பொழுது செவ்வாய் கிழமை அன்று 10.30 மணிவரை தான்
ஆண் ஜெனனம் பூமியில் அதன் பின் பெண் ஜெனன காலம், எனக்கு
தெரிந்தது ,
அவர்களிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை நான் குறிப்பு வைத்து கொண்டேன் ,
இப்படி காலம் தவறாக கணிக்க பட்ட ஜாதகம்கள் தான் இன்று எழுத படுகிறது .
இதை போல ராகு கிரகதேவர் ஒரு நாளைக்கு 3.75 நாழிகை தன்னுடைய காலமாக பிரித்து கொண்டார் .(1.5 மணிநேரம் )
இவருடைய காலம் எந்த கணக்கோ அதே எதிர் திசையில் கேதுவின் காலமாக நடத்தபடுகிறது .
ராகுவின் புத்திரன் --அர்த்தப்ர கரணன்
கேதுவிற்கு --குழந்தை இல்லை(ஞான காரகன் )
சனி புத்திரன் --குளிகன் /மாந்தி
ராகுவின் காலம் --ராகு காலம்
கேதுவின் காலம் --எம கண்டம்
ராகு /கேது காலத்தில் எது செய்தாலும் தீமையாக அல்லது தடையாக/தாமதமாக
முடியும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது ,
காரணம் இவர்கள் இருவரும் 7 கோள்களின் எதிர் திசையில் பூமியை சுற்றி வருகிறார்கள் என்றும் இவர்களின் ஒளி
கதிர்கள் பூமிக்கு சுப பலனை தராது என்று சொல்ல படுகிறது .
பொதுவாக சுப காரியம்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .
ராகு காலத்தில் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு என்ற சொல்ல காரணம்
ராகு வாலை சாபத்தின் அடையலாம்(பெண் )
ராகு பரம்பரை
ராகு அதிர்ஷ்டம் தரும் கிரகம் திருப்பம் தரும் கிரகம்
ராகு துடிப்பான செயலை உடையது
இந்த ராகுவின் ஆசிகள் அம்பாளிடம் மட்டும் நன்றாக செயல்படும் என்பதாலும் 7 முட்டைகளில் 7 பாம்பு சகோதரிகளாக ராகுவின் காரகத்துடன் அம்பாள்
ஜெனனம் கொண்டதால் ராகு காலம் அம்பாளுக்கு சிறப்பாக மாறியது .
இப்படி காலத்தில் தனக்கு ஒரு பங்கை எடுத்த ராகு
ஒவ்வொரு கிழமைகளில் ராகு காலத்தில் தெய்வம்களை வழிபட/
தேவதைகளை வழிபட காரியம் சித்தியாகும் என்று நூல்கள் சொல்கிறது .
திங்கள் ராகு காலத்தில் --சிவனுடன் உள்ள அம்பாளை வழிபாடு செய்ய தடை இல்லாத புகழ் கிடைக்கும்
செவ்வாய் ராகு காலத்தில்--முருகனை வழிபாடு செய்ய ரத்தத்தில் /வயிற்றில் உள்ள நோய்கள விலகும்
புதன் ராகு காலத்தில்--பெருமாளை வழிபாடு செய்ய தொழில்/உத்தியோகத்தில் மேன்மை ஏற்பட்டு தடைகள் விலகும்
வியாழன் ராகு காலத்தில் --விநாயகரை வழிபாடு செய்ய உணவு தானம் செய்ய மதிப்பு மரியாதை சமுதாயத்தில் கிடைக்கும் .
வெள்ளி ராகு காலத்தில்-- தனித்த துர்க்கை /காளி/பெண் தேவதைகள் வழிபாடு செய்ய பெண் சாபம், வாலை சாபம், ராகுவின் சாபம், மற்றும் தரித்தரம் விலகும் .
சனி ராகு காலத்தில்--சிவபெருமானை /பெருமாளை வழிபாடு செய்ய நட்பினால் வந்த துரோகம் ,கீழ்மட்ட
சமூகத்தினர்களினால் உண்டான சாபம் ,வம்ச சாபம் விலகும்
ஞாயறு ராகு காலத்தில்--சிவனையும் ,பெருமாளையும் வழிபாடு செய்ய
அரோக்கியம் ,ஆயுள் ,அரசாங்கத்தின் அதரவு மற்றும் குலதெய்வ ஆசிகள் கிடைக்கும்
(இதை சகல தோஷ நிவர்த்தி என்பார்கள் )
இதை போல ஒவ்வொரு கிழமைகளில்
எமகண்ட நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ய பைரவரின் ஆசிகள் கிடைக்கும் ...
எமகண்ட நேரத்தில் பெற்ற கடன் தொகைகளை திருப்பி தர கடன்தொகைகள் விரைவாக முடிக்க படும் .
நன்றி

Wednesday, March 23, 2016

பங்குனி உத்திர

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று.
இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். இது ஈசனுக்குரிய அஷ்டமகா விரதங்களுள் ஒன்றாகும்.
பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.
புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
புராணத் தகவல்கள் :
1. இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
2. காஞ்சியில் ஆற்றுமணலை பிடித்து வழிபட்ட காமாட்சி அன்னைக்கு அருள் புரிந்து, ஏகம்பரநாதருடன் திருக்கல்யாணம் நடந்தது இந்நாளில் தான்.
3. மதுரையில், மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான்.
4. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின்
மகளான தெய்வானையை இந்நாளில் தான் மணம் செய்து கொண்டார்.
5. இந்நாளில் தான் பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி தோன்றி, நாராயணனை மணந்த திருநாள் ஆகும். எனவே இதே நாள், அன்னையின் தோற்ற மற்றும் திருமண நாளாகவும் கொண்டாடப் பெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்நாளை மகாலட்சுமி ஜெயந்தி என்றும் வழங்குவர்.
6. இந்நாளிலேயே ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாரை கரம்பிடித்தார்.
7. மேலும், இந்நாளிலேயே பிரபு ஸ்ரீராமர் – சீதையின் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
8. இந்நாளிலேயே, பிரம்மதேவர் அன்னை சரஸ்வதியை மணந்தார்.
9. இந்நாளிலேயே இறைவன் தர்மசாஸ்தா அவதரித்தார்.
10. இந்நாளிலேயே தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடைபெற்றது.
11. இந்நாளிலேயே 27 நட்சத்திர கன்னியருக்கும், சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது.
12. இந்நாளிலேயே நம்பிராஜனுக்கு அன்னை ஸ்ரீவள்ளி அவதரித்தார்கள்.
மேலும் பல சிறப்புகள் :
1. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
2. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இடம்பிடித்தார்கள்.
3. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை சரஸ்வதி பிரம்மதேவரின் வாக்கினில் இடம்பிடித்தார்கள்.
4. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
5. இந்நாளில் தான் அர்ஜுனன் அவதரித்தான் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.
6. இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும், பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும் மணந்து கொண்டதாக கந்தபுராணம் குறிப்பிடுகிறது.
7. இந்நாளில் தான் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்.
ஆலய விசேஷங்கள் :
1. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட திருவரங்கநாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான்.
வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய்
வரும் நம்பிக்கை.
2. அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். அந்த தலத்தின் வரலாறு அவர் முன்னிலையில் படிக்கப்படும்.
3. பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
4. காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
5. மயிலையில் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். இந்நாளில், இறைவனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களும் ஊர்வலமாக வருவார்கள். இது 7ஆம் நூற்றாண்டில் இருந்து கடைபிடிக்கப்படும் தொன்மையான திருவிழா ஆகும்.
6. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை அழித்ததற்குப் பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தார்.
அந்த நாள் பங்குனி உத்திரமே. எனவே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான தெய்வானையுடன் முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது.
7. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அணிவகுக்கும் மச்சக்காவடி, சேவற்காவடி, கற்பகக் காவடி உலகப் பிரசித்தி பெற்றது. எனவே அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று முருகனின் கல்யாணக் கோலம் கண்டு வாழ்வில் நன்மங்கலம் அடையப் பெறுவோம்.
8. சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டுவிழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம்.
விரத முறை :
பங்குனி உத்திர நன்னாள் குலதெய்வ வழிபாட்டுக்கு மிக மிக உகந்த நாள். இந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவது நம்முடைய குலம் தழைக்க உதவுகிறது. நம்முடைய முன்னோர்களின் பரிபூரண ஆசிகளை பெற்று தரக்கூடியது.
பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை பால், பழம் சாப்பிடலாம். மாலையில் ஆலய தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். தெய்வ திருமண வைபவங்களை தரிசிக்க வேண்டும்.
ஆலயம் சென்று வணங்கி, அஸ்தமனத்தின் மேல் இரவிலே உணவுண்டு, வெறும் தரையில் ஒரு துணியை விரித்து அதன் மீது உறங்க வேண்டும். காலையில் மீண்டும் அம்மையப்பனை ஆலய தரிசனம் செய்து விட்டு பாரணை செய்து விரதம் பூர்த்தி செய்ய வேண்டும்.
பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலங்கரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும். குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள், சர்க்கரைப் பொங்கலோடு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
பங்குனி உத்திர நாளில் திருவிளக்கு தீபத்தில் சிவன் பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து நம் பாவங்கள் அகன்று மங்களம் கைகூடப் பெறலாம்.
கந்தக் கடவுளுக்கும் உரிய திருநாள் ஆதலால் ஆலய தரிசனத்தோடு இல்ல வழிபாட்டின் போது சஷ்டிக் கவசம் சொல்லி முருகனையும் வழிபட்டுச் சிறக்கலாம்.
விரத பலன்கள் :
தெய்வத் திருமணங்களை தரிசித்து, நம் வீட்டிலும் மங்கள விழாக்கள் நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வத் திருமண உற்ஸவங்களில் கலந்து கொண்டு இறைவனிடம் நம் மனதின் பாரத்தை வைத்தால், நம் இல்லங்களிலும் கல்யாண கெட்டிமேளம் கேட்கும் வாய்ப்பு கூடிவரும் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை.
பங்குனி உத்திர விரதம் இருந்து மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மலர்க்கரம் பிடித்ததைப் போல் நம் வீட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் நல்ல பக்தி உடைய துணைவர் கிடைக்கப் பெறுவதுடன், வற்றாத செல்வ வளமும் உண்டாகும்.
பங்குனி உத்திர விரதம் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்வோருக்கு அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும் என்று விரத நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.
உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.
இந்நாளில் விரதம் இருக்க இயலாதவர்கள் அன்னதானம், வஸ்த்ரதானம் செய்வது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது.
பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.