Monday, August 17, 2015

ஐயப்பன் - விரதமுறைகள்

ஐயப்பன் - விரதமுறைகள்
சபரி மலை யாத்திரைக்கு அதாவது சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கோள்ளும் ஒவ்வொரு பக்தருக்கும்  பின்பற்ற வேண்டிய விரத முறைகள், செய்ய வேண்டிய பூஜை முறைகள், புனித யாத்திரையின் பொழுது கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றின் விவரங்கள், விதிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் உள்ள ரகசியங்கள் புரிந்து இருக்க வேண்டும்
அப்பொழுது தான் அதை முறையாக கடைபிடித்து செயலாற்றி இடையில் வரும் இடையூறுகளைக் களைந்து அடைய நினைக்கும் இலக்கை அடைந்து கொண்ட கொள்கையை முடித்து வெற்றி பெற முடியும்.

ஐயப்பன் விரதம் - விதிமுறைகள்

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
2. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.
3. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது.   அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
4.மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
5. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
6. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

விரத நாட்கள்
சபரி மலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடினமான விரதம் மேற்கொள்ள வேண்டும் ஐயப்பனுக்காக மேற்கொள்ளப் படும் விரதத்தின் நாட்கள் 41 நாட்களாகவோ அல்லது 45 நாட்களாகவோ கணக்கில் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்
41 நாட்களைக் கூட்டினால் 5 வருகிறது 5 என்பது பஞ்ச பூதங்களை குறிப்பதால் 41 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
45 நாட்களைக் கூட்டினால் 9 வருகிறது 9 என்பது நவ கிரகங்களைக் குறிப்பதால் 45 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 45 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்

கழுத்தில் அணியும் மாலை
ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் துவக்க நாளன்று ருத்ராட்சக் கொட்டைகளினால்  செய்யப் பட்ட மாலையையோ (அல்லது) துளசி மணிகளால் செய்யப் பட்ட மாலையையோ கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்
கழுத்தில் பெரிய மாலை சிறிய மாலை என்று இரண்டு விதமான மாலைகளை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள் சிறிய மாலை துணைமாலை என்றும் அழைக்கப் படுகிறது

பெரிய மாலை 108 எண்ணிக்கை கொண்ட பெரிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட பெரிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ பெரிய மாலை இருக்கும்
சிறிய மாலையில் 108 எண்ணிக்கை கொண்ட சிறிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட சிறிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ சிறிய மாலை இருக்கும்
பெரிய மாலையிலும் சிறிய மாலையிலும் ஐயப்பனின் படமும், விநாயகரின் படமும் கொண்ட டாலர்  மாட்டப் பட்டிருக்கும்.

ஐயப்பனுக்காக மாலை அணிந்த நாள் முதல் விரத நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விடும் விரத நாட்கள் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் விரத நாட்களில் அனுசரிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய முறைகள் இருக்கின்றன
இதை ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கண்டிப்பாக தன் விரத நாட்களில் பின்பற்றியே ஆக வேண்டும் அதை இப்பொழுது பார்ப்போம்

குளிப்பது
விரதம் இருக்கும் பக்தன் அதிகாலை சூரிய உதயத்திறகு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் .குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  .தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்

பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்து விட்டு காலையில் எழுந்து செய்தது போலவே செய்ய வேண்டும்
பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும் பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.


செல்ல வேண்டிய கோயில்
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும் சிறிது நேரம் கோயிலிலேயே அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஐயப்பன் கோயில் இருந்தால் அங்கு சென்று வணங்கலாம் ஐயப்பன் கோயில் இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு தெய்வம் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கலாம்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

உணவு
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் (அல்லது) வேறு ஒரு ஐயப்ப பக்தர்  செய்து கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டும் இதனைத் தவிர்த்து மற்றவர்கள் கையால் செய்யப் பட்ட உணவையும் உணவகங்களில் செய்யப்பட்ட உணவையோ சாப்பிடக் கூடாது

உறக்கம்
ஐயப்ப பக்தர்கள் காலையிலோ மத்தியானத்திலோ உறங்கக் கூடாது அப்படி உறங்கினால் உறங்கி எழுந்தவுடன் குளிக்க வேண்டும் குளித்து முடித்து விட்டுத் தான் மற்றைய வேலைகளைச் செய்ய வேண்டும்

செய்யக் கூடாதவை
செருப்பு போடக் கூடாது, முடி வெட்டக் கூடாது ,நகத்தை வெட்டக் கூடாது, ஷேவ் செய்யக் கூடாது ,அலங்காரம் செய்யக் கூடாது, வாசனைத் திரவியங்களைச் சூட்டிக் கொள்ளக் கூடாது.
மது அருந்துதல் ,சிகரெட், பீடி பிடித்தல் போன்ற எந்த விதமான போதையையும் உண்டாக்கக் கூடிய போதை வஸ்துகளைப் பயன்படுத்தக் கூடாது
உயிர் வதை செய்வது ,உயிர்களைக் கொல்லுவது ,புலால் உண்ணுவது ,அசைவ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி ,உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்ற ஆறு வகை குணங்களும் நம்முள் வெளிப்படாதவாறும் செயல்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆறு வகை குணங்களும் கண்டிப்பாக வெளிப்படக் கூடாது
பொய் ,சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை சிந்தையாலும் ,செயலாலும் தொடக் கூடாது
பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்; பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; பெண்களை நினைவாலும் உடலாலும் தொடக் கூடாது

செய்ய வேண்டியவை
எண்ணம் சொல் செயலால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்
தன் வீட்டில் விருந்தாளியாக வருபவர்களுக்கு உணவு படைத்து உபசரிக்க வேண்டும்

மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.
பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

நினைவு
சாதி மதம் இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு போன்ற வேறுபாடுகளை எந்த உயிர்களிடத்தும் காட்டாமல் மற்றவர்கள் மனம் வருத்தப் படக் கூடிய வார்த்தைகளையோ ,ஆபாசமான சொற்களையோ ,மற்றவர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளையோ உபயோகப் படுத்தாமல் , எண்ணம் ,சொல் ,செயலால் எப்பொழுதும் ஐயப்பனையே நினைக்க வேண்டும். ஐயப்பன் நாமத்தையே சொல்ல வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும் இறைவன் என்று நினைக்க வேண்டும்; அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த நினைப்பு ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் நினைவிலும் செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்க்கும் அனைத்து உயிர்களையும்     ""சாமி ""     என்று கூப்பிட வேண்டும் என்ற சடங்கு முறை உள்ளது

தரிசித்தல்
யோக நிலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க முதல் 3 வருடம் செல்பவர்கள் குருவின் அடையாளமாக மஞ்சள் ஆடைகளை அணியலாம்
அதன்பின் 15 ஆண்டுகளுக்குக் கருநீல ஆடை அணிந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கலாம்
18 ஆண்டுகள் தரிசனத்தை முடித்தவர்கள் யோக நிலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்க முழுவதும் காவி உடை அணிந்து தரிசித்தால் சிறந்த பலனை அடையலாம்

யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

உணர வேண்டியது
மேலே சொல்லப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்றவாறும் தனக்கு உகந்தவாறும் தன்நிலைக்கு எவையெல்லாம் சரியாக வருமோ அவற்றை மட்டும் பின்பற்றி ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கின்றனர்
வேலையின் காரணமாகவோ தொழில் நிமித்தமாகவோ மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல்  இருப்பது ஐயப்பனை இழிவு படுத்துவது போலாகும் இதனை செய்ய முடியாதவர்கள் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதை தவிர்த்தல் நல்லது
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் தனக்கு பொருந்தக் கூடிய தனக்கு உகந்த தன்னால் முடிந்த அளவு பின்பற்றக் கூடிய விதிமுறைகளை மட்டும் பின்பற்றி விரதம் இருப்பவர்கள் உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருக்கவில்லை என்பதை அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்
உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருப்போம் வாழ்வில் தேவையான நலன்களைப் பெற ஐயப்பனை வணங்குவோம்

No comments:

Post a Comment