Thursday, December 29, 2011

முன்னேற்ற மூல மந்திரங்கள் – சுகி சிவம்


உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“”ரிலேட்டிவிட்டி தியரி என்கிற உங்கள் அரிய விஞ்ஞான உண்மையை நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் இந்த உலகம் என்னவாகி இருக்கும் ?”
ஐன்ஸ்டீன் சிரித்தபடி, “”ஒன்றும் குடி முழுகிப் போய் இருக்காது… வேறு ஒருவர் அதைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருப்பார்” என்றார்.
அதிர்ச்சி அடைந்த கேள்வியாளர், “”இன்னொருவர் கண்டறிந்து வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆகி விடும் அல்லவா ?” என்று இழுத்தார்.

சிறிது யோசித்த ஐன்ஸ்டீன்… “”அதிகபட்சம் இன்னும் ஒரு மூன்று வாரங்கள் வேண்டுமானால் தள்ளிப்போயிருக்கும். அவ்வளவுதான்”என்றார். ஆம்… இது உண்மை. உலகில் ஒரே ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் இதைக்கண்டறிய முடியும் என்பதில்லை. காரணம் அதே கால கட்டத்தில் பல விஞ்ஞானிகள் பல பகுதிகளில் அத்தகைய சிந்தனைத் தாக்கத்துடன் அதே கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர். யார் முந்தப் போகிறார்கள் என்பதற்குத்தான் உலகம் காத்திருந்தது. ஒரு பந்தயம் போல…
வேறு ஜெர்மானிய விஞ்ஞானியும் ரிலேட்டிவிட்டி தியரியின் பல கூறுகளை ஆய்வு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட முடிவையும் கண்டறிந்து விட்டார். ஆனால், வகுத்து, தொகுத்து, ஆராய்ச்சிக் கட்டுரையாக்க தாமதம் செய்து விட்டார். எழுத்தில் வடிப்பதில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டதால் புகழ் முழுவதையும், ஐன்ஸ்டீன் அள்ளிக் கொண்டார். ஐன்ஸ்டீன் அவரையும் அவரது ஆராய்ச்சியையும் மனதில் வைத்துக் கொண்டுதான் அதிகபட்சம் மூன்று வாரங்கள் என்று பதில் கூறியதாகக் கருதுகிறார்கள்.

பலர் இப்படித்தான் பெரும்புகழையும், பொருளையும் சின்னச் சின்ன சோம்பேறித்தனத்தால் இழந்து போய் விட்டார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்னர் செய்து முடிக்கலாம் என்று கொஞ்சம் தள்ளி வைத்தவர்களை உலகம் மொத்தமாகத் தள்ளி வைத்து விடுகிறது. காரணம் இது ஒரு ஓடுகளம்…
இங்கே தயங்கி நிற்பவர்கள் தள்ளப்படுவார்கள்.
ஒரு சின்ன தகவல் படித்தேன். கடிதங்கள் எழுதுவதில் தபால் அட்டைகளை அதிகம் பயன்படுத்துகிறவர்கள் கொஞ்சம் கூடுதல் சுறுசுறுப்புள்ளவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறதாம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார், திரு கி.ஆ.பெ. விசுவநாதன், திரு கி.வா. ஜகன்னாதன் போன்ற பெரியவர்களோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். இவர்கள் எவ்வளவு வேலைகள், பயணங்களுக்கிடையிலும் கிடுகிடுவென்று தபால்களுக்குப் பதில் எழுத அஞ்சல் அட்டைகளை உபயோகிப்பார்கள். உடனுக்குடன் தபால் பெட்டியில் சேர்த்தும் விடுவார்கள்.
ஒருமுறை ஒரு விழாவில் பேசி விட்டு திரு கி.வா.ஜ. அவர்களும் நானும் ரயிலில் ஒன்றாக வந்து கொண்டிருந்தோம். காலையில் ரயில் சென்னை வந்து அடையும் முன்பு எழுந்து நான்கைந்து தபால் அட்டைகளில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். ரயில் நிலையத்தில் இறங்கியதும் நிலையத்தில் இருந்த தபால் பெட்டியில் தம் கைப்பட சேர்த்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள். “”இவ்வளவு அதிகாலையில் தபால் எழுதி உடனே பெட்டியிலும் சேர்க்கிறீர்களே… ஏதும் அவசரமா ?” என்றேன்.

“நேற்று விழா நடத்தி நம்மை ரயிலில் கொண்டு வந்து பொறுப்புடன் சேர்த்த நண்பர்களுக்குத்தான் நன்றி தெரிவித்து, பத்திரமாக வந்து சேர்ந்த விவரத்தையும் எழுதினேன். அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால் அப்படியே போய் விடும்” என்றார்.
“” நலமுடன் சென்னை வந்து சேர்ந்தேன். அன்புடன் உபசரித்தமைக்கு நன்றி” என்று ஊர் சேருமுன்பே தபால் எழுதி நேரத்தை மிச்சப்படுத்தி உடனுக்குடன் செயலை முடிக்கும் அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.
அப்போது அவர் சொன்னார். “”இது ராஜாஜி அவர்களிடமிருந்து நான் அறிந்து பின்பற்றும் வழக்கம்” என்றார். இப்போதுதான் செல்ஃபோன் வந்து விட்டதே… இது ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். தபால் அட்டை எழுதுங்கள் என்பது என் செய்தி அல்ல. வேலைகளைத் தள்ளிப்போடாது உடனுக்குடன் முடியுங்கள்… விரைவாகச் செயல்படுங்கள்… தாமதம் தலைவனாகிறவனுக்குத் தடை என்று உணருங்கள் என்பதே என் செய்தி.

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரும் வெங்காய லாரிகளை, உருளைக் கிழங்கு லாரிகளை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா ? சந்தைக்கு லாரியைக் கொண்டு வரும் ஓட்டுனர்கள் புயல்வேகத்தில் வருவார்கள். ஒரே காரணம். முதலில் வரும் லாரியில் உள்ள காய்களுக்குக் கிடைக்கும் விலை அடுத்தடுத்த
லாரியின் காய்களுக்குக் கிடைக்காது. அசுர வேகம் ஆபத்து என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
அதையும் உணர வேண்டும். அதே சமயம் தாமதமாக லாரிக்குக் கணிசமாக விலை கிடைக்காது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேறுகிறவர்கள் முந்திக் கொள்ள வேண்டும்.

“”பரபரப்பு வேறு. சுறுசுறுப்பு வேறு. பரபரப்பு ஆபத்தின் அன்னை. சுறுசுறுப்பு வெற்றியின் செல்லப்பிள்ளை.
சமய உலகில் மனிதனுடைய குணங்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து மூன்று பிரிவுகளில் அடக்கினார்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்பார்கள். தமஸ் என்கிற தாமத இயல்பு கடவுளை அடையப் பெருந்தடை என்கிறார்கள்.

மகிஷாசுர மர்த்தினி என்று துர்க்கைக்குப் பெயர். அவள் எருமைத் தலையை மிதித்தபடி நிற்பாள். துர்க்கை என்றால் மன உறுதி… இங்கு தமோ குணத்தை எருமையாகச் சித்தரித்து சொல்கிற புராணக் கதை அது. எருமைகள் எவ்வளவு மந்தமாக இயங்கும் என்பதைக் கவனித்தால் நாம் வெட்கப்படுவோம். வழியை அடைத்துக் கொண்டு படுத்திருக்கும் எருமைகளை முன்பு எல்லாம் வாலை முறுக்கி வலியேற்படுத்தி எழுப்பி விடுவார்கள். அப்போதும் சில எருமைகள் எழாது. எழுந்தாலும் மறுபடியும் படுத்துக் கொள்ளும்.
தமோ குணம் உள்ளவர்கள் எந்தச் செயலிலும் இறங்க மாட்டார்கள். இறங்கினாலும் வேலை செய்ய மாட்டார்கள். அதனால் அவர்கள் எருமைகள்.
சமய உலகில், இறைவனுக்குப் பூசைக்குப் பயன்படுத்தும் பூவை மலரும் முன் பறித்து விட வேண்டும் என்று ஒரு நியதி உண்டு. அதை இலக்கியங்கள் “”வண்டு தொடா மலர்” என்று எழுதும். வண்டுமொய்த்த மலர்களைக் கடவுளுக்கு இடுவது பாவம் என்று ஒரு கருத்து உண்டு.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வண்டு என்ன கடவுளுக்கு எதிரியா ? கருஞ்சட்டை போட்டிருப்பதால் கடவுள் எதிர்ப்புக் கழக உறுப்பினரா ? ஏன் வண்டு தொட்ட மலரைக் கடவுளுக்குச் சூட்டக்கூடாது ?
சிலர் முட்டாள்தனமாக வண்டு மலரில் வாய் வைத்தால் மலர் எச்சிலாகும். எச்சிலான பொருளைக் கடவுள் ஏற்க மாட்டார் என்று நீட்டி முழக்குவார்கள். அட அசடுகளே ! எச்சில் கடவுளுக்கு ஆகாது என்றால் தேனை எப்படி அபிஷேகம் செய்ய முடியும் ? தேன் கலந்த பஞ்சாமிர்தத்தை எப்படி படைக்க முடியும் ? கடவுளுக்கு எச்சில் ஆகாது என்பது வீண் புளுகு. தேனுக்கு “”வண்டெச்சில்” என்றே திருப்புகழில் பாட்டு உண்டு.

வண்டு தொடாமலர் என்பதற்கு ஒரே காரணம், காலை அதிசீக்கிரம் எழுந்து மலர்களை மொய்ப்பது வண்டு.
அது தொடா மலர்தான் கடவுளுக்கு உரியது என்று விட்டால் வண்டுக்கு முன்பாக மனிதன் எழுந்தால்தான் அப்படிப்பட்ட பூவைப் பறிக்க முடியும். தாமத குணம் நீங்கி அதிகாலை எழுந்து சுறுசுறுப்புடன் செயல்பட மனிதனைத் தயாரிக்கவே சமயவாதிகள் வண்டு தொடா மலரே கடவுளுக்கு உகந்தது என்று கதை சொன்னார்கள்.
அதிகாலை எழுவது… சுறுசுறுப்புடன் செயல்படுவது… ஒத்திப் போடாமல் வேலை செய்வது… தாமதத்தை ஜெயிப்பது உடனுக்குடன் தொழில்படுவது என்பவை எல்லாம் முன்னேற்ற மனிதர்களின் மூல மந்திரங்கள்…

No comments:

Post a Comment