Thursday, August 13, 2015

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை தெரியுமா?

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை தெரியுமா?
மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.
சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment