Thursday, January 26, 2012

ஜோதிட சாஸ்திரம் பொய் ?????


சோ : ஜோதிட சாஸ்திரத்தை அப்படிச் சொல்லிவிட முடியாது. வான சாஸ்திரத்தையும் (அஸ்ட்ரானமி), கணித சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிட சாஸ்திரம். அந்த அடிப்படையில், கிரஹ சஞ்சாரங்களைக் கணித்து, பல நிகழ்ச்சிகளைக் கவனித்து, இந்த கிரஹ நிலை – இன்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அனுபவ பூர்வமாக மிகவும் பார்த்து, ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட சாஸ்திரம் ஜோஸ்யம். வராஹமிஹிரர் என்பவர் கணித மேதை; வானசாஸ்திர நிபுணர். அவருடைய பிருஹத்சம்ஹிதை என்பது மிகவும் போற்றப்படுகிற நூல்.

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் ஜோதிடம் அறிந்தவன் அல்ல. அதைக் கற்றுக் கொள்ள முனைந்து, அதில் உள்ள நெளிவுசுளிவுகளைப் பார்த்து, மலைத்து, ‘இது நம்மால் முடிகிற காரியம் இல்லை’ என்று நான் முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் ஒன்று புரிந்தது.

ஜோதிடம் ஒரு சட்டம் மாதிரி. சட்டத்தில் விதிமுறை இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும், எல்லா விஷயங்களிலும் அது சரி வராது. அந்த விதிமுறைக்கு விதி விலக்கு இருக்கும். விதிவிலக்கின் தன்மையை அறியாமல், விதியை மட்டும் பார்த்தால், சட்டத்தையே தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். இது தவிர, சட்டத்தின் ஒரு பிரிவு சொல்வதை, மற்றொரு பிரிவு மறுப்பது போல இருக்கும். ஆழ்ந்து பார்த்தால் அந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே இருப்பது முரண்பாடு அல்ல, சூழ்நிலைகளின் வேறுபாடுக்கிணங்க, விதிக்கப்பட்டிருக்கிற மாறுபட்ட விதிகள் என்பது புரியும்.

சட்டத்தில், ஒரு அணுகுமுறை முக்கியமானது. ஒரு சட்டத்தை, அர்த்தம் செய்து கொள்கிறபோது – அதில் ஒரு பிரிவு சொல்வதை, இன்னொரு பிரிவின் மூலம் அர்த்தமற்றதாகச் செய்ய முனையக் கூடாது. அம்மாதிரி முரண்படுகிற தோற்றமுள்ள பிரிவுகளை, ஒன்றுக்கொன்று ‘ஹார்மனைஸ்’ செய்ய வேண்டும். அதாவது, அம்மாதிரி பிரிவுகள் ஒன்றுக்கொன்று பொருந்தும்படியாக அர்த்தம் செய்ய வேண்டும். இப்படி சட்ட விளக்கத்தில் பல நுணுக்கங்கள் உண்டு. இதைத் தவிர, ஏற்கெனவே தீர்மானம் ஆகிய விளக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஜோதிடத்திலும் இம்மாதிரி நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை அறியாமல், மேலெழுந்த வாரியாகப் பார்க்கிறவர்கள் சொல்கிற ஜோதிடம், குருட்டாம் போக்கில் பலித்தால்தான் உண்டு. ஒரு விதி; அதற்குப் பல விதிவிலக்குகள்; அந்த விதிவிலக்கின் ஆதிக்கம் பெறுவதற்கு வேறு சில நிபந்தனைகள்; அந்த நிபந்தனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள சில நியாயங்கள்… என்று ஜோதிட சாஸ்திர பொருள் அறிகிற வேலை, ரொம்பவும் சிக்கலானது. இவை எல்லாவற்றிற்கும் கணக்குகள் வேறு!

இவ்வளவு சிரமப்பட்டுப் புரிந்து கொள்ள வேண்டிய சாஸ்திரத்தை, சரியாகக் கற்காத பல ஜோஸ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால், விஷயம் தெரியாத டாக்டரிடம் போகிற மாதிரிதான்.

ஆனால், அப்படி விஷயம் தெரியாத டாக்டரிடம் சென்று, நோய் குணம் ஆகாமல் அவதியுறும்போது – நாம் அந்த டாக்டரைத்தான் பழிக்கிறோமே தவிர, மருத்துவ விஞ்ஞானத்தைக் குறை சொல்வதில்லை. அதே போல, ஒரு ஜோதிடரிடம் போய், அவர் சொல்லும் பலன்கள் பொய்த்துப் போகிறபோது, நாம் அவருடைய திறமையைக் குறை சொல்லலாம் – ஆனால், அவருடைய தவறுக்காக ஜோதிட சாஸ்திரத்தையே பழிப்பது தவறு.

டாக்டர்களைப் பற்றி பேசுவதால், இன்னொன்றையும் நினைத்துப் பார்ப்பது நல்லது. மருத்துவத்தில் இன்று வியாபார நோக்கம் தலைவிரித்தாடுகிறது. பல அனாவசிய டெஸ்ட்கள் மட்டுமின்றி, சில அனாவசிய ஆபரேஷன்கள் கூடச் செய்யப்படுகின்றன. காரணம், வியாபார நோக்கம்.

ஜோஸ்யத்திலும், இதே போல வியாபார நோக்கம் பரவி விட்டதால், பரிகாரங்கள் என்ற பெயரில் பல சமயங்களில் அனாவசியச் செலவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ‘மாஸ் ஜேஸ்ம்’ என்கிற மாதிரி, இந்தச் சக்கரம், அந்தச் சக்கரம் என்ற பெயரில் தகடுகள் அடித்துத் தரப்படுகின்றன.

டாக்டர்களிடையே எப்படி நம் அனுபவத்தின் காரணமாக, சில வர்த்தக டாக்டர்களை நாம் தவிர்க்கிறோமோ, அதே போல வர்த்தக ஜோஸ்யர்களையும் தவிர்க்க வேண்டும். அதை விட்டு, ஜோதிட சாஸ்திரத்தையே பொய் என்று முடிவு கட்டுவது அவ்வளவு சரியாக இருக்காது.

வராஹமிஹிரரே, தனது ‘பிருஹத்சம்ஹிதை’ என்கிற நூலில், விவரமறியாத ஜோதிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

No comments:

Post a Comment