Tuesday, May 22, 2012

மூளை உற்சாகப் புதிர்கள் -3


கீழ் வரும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் அடுத்து வரும் எழுத்து என்னவாக இருக்கும்?

O,T,T,F,F,S,S,E,_____?

2. ஐந்தில் பாதி நான்கு. எப்படி?

3. ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும், அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது. அது என்ன?

4. வட அமெரிக்காவில் உள்ள ஒருவரைத் தென் ஆப்பிரிக்காவில் புதைப்பதை அந்த நாட்டுச் சட்டம் அனுமதிப்பது இல்லை. ஏன்?

5. மூன்று மாளிகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று சிவப்பு, மற்றொன்று பச்சை, மற்றது வெள்ளை. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் இடது புறத்தில் சிவப்பு மாளிகை இருக்கிறது. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் வலது புறத்தில் பச்சை மாளிகை இருக்கிறது. அப்படிஎன்றால் வெள்ளை மாளிகை எங்கே இருக்கிறது?

6. கண்ணனுக்குத் தோட்டத்து மாங்காய் பறித்துச் சாப்பிட ஆசை. அதுவும் திருட்டு மாங்காய். மாந்தோப்புக்குச் சென்றவன், அடுத்தடுத்து மூன்று காவலாளிகள் இருப்பதைக் கண்டான். அவர்களை மீறி மாங்காய் பறிக்க முடியாது. திடீரென கண்ணனின் மூளைக்குள் பளிச் பல்ப். முதல் காவலாளியிடம் சென்றவன், 'என்னைத் தோப்புக்குள் அனுமதித்தால், நான் பறிக்கும் மாங்காய்களில் சரிபாதியை உங்களுக்குத் தருவேன். அதில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் எனக்குத் திருப்பித் தந்தால் போதும்!' என்றான். காவலாளி அதற்குச் சம்மதித்து அவனை உள்ளே அனுமதித்தான். இதுபோலவே மற்ற இரண்டு காவலாளிகளிடமும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான். வேண்டிய மாங்காய்களைப் பறித்துக்கொண்டு திரும்பி வரும்போது மூன்று காவலாளிகளிடமும் ஏற்கெனவே சொன்னவாறு கொடுக்கல் வாங்கல் முடித்து வெளியே வந்தான். ஆனாலும், பறித்த மாங்காய்களில்ஒன்று கூடக் குறையாமல் கண்ணன் கைகளில்இருந்தது. எப்படி?

7. நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்கு வெளியே ராஜு மிகுந்த பதற்றத்துடன் காத்திருக்கிறான். தன் பெயர் அழைக்கப்பட்டவுடன் வேகவேகமாக உள்ளே சென்றவன், மிதியடி தடுக்கி, கையில் இருந்த ஃபைலுடன் நேர்முகத் தேர்வு நடை பெற்ற அறைக்குள் விழுந்துவிட்டான். கடுப்பான அதிகாரிகள், ''ராஜு! வாட் இஸ் திஸ்?'' எனக் கேட்டனர். பதற்றத்துக்கு நடுவே ராஜு சொன்ன பதிலில் அதிகாரிகளின் கோபம் மறைந்து, ''ஓ.கே... ஓ.கே! கம் இன்சைட்!'' எனச் சிரித்துக்கொண்டே கூறினர். அப்படி அவர்கள் சிரிக்கும் அளவுக்கு ராஜு என்ன சொல்லிஇருப்பான்?

8. நேர்முகத் தேர்வில் மோகனிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. 'உங்களது இடப்பக்கமும், வலப் பக்கமும் இரண்டு கிணறுகள் உள்ளன. இடப்பக்கக் கிணறு முழுக்க நீர் நிரம்பி இருக்கிறது. வலப்பக்கக் கிணற்றில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை. இரண்டு கிணறுகளும் சம அளவு ஆழம் உடையது. உங்களிடம் ஒரு வாளி தரப்படுகிறது. அந்த வாளியைப் பயன்படுத்தி எத்தனை முறைகளில் உங்களால் இடப்பக்கக் கிணற்றில் இருந்து நீரை வலப்பக்கக் கிணற்றுக்கு மாற்ற முடியும்?'' மோகன் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கவில்லை. ஆனாலும், அவனுக்கு வேலை கிடைத்தது. ஏன்?

9. 5+5+5=550. ஒரே ஒரு கோடு போட்டால் இந்த சமன்பாடு உண்மையாகும். அந்தக் கோடு எது?

10. ஒரு பொருள். அதில் ஒன்று வாங்கினால் ஐந்து ரூபாய், இரண்டு வாங்கினால் அதே விலைதான். 12 வாங்கினால் பத்து ரூபாய். 144 வாங்கினால் பதினைந்து ரூபாய். அந்தப் பொருள் என்ன?

11.கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு மின்சார ரயில் 90 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?

12. நான் பொய் சொல்லவே மாட்டேன். என்னிடம் இரண்டு நாணயங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால், சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. எப்படி?

13. நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர். பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர். பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார். அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது. அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. எப்படி?

Ans:

1. N. N for Nine. (O-One, T-Two, T-Three...E-Eight, N-Nine!)

2. இப்படி... F( IV )E.

3. பஞ்சு.

4. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் அல்ல... உயிரோடு இருப்பவரைப் புதைப் பதற்கு எந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லைங்கோவ்!

5. வெள்ளை மாளிகை வாஷிங்டன் டி.சி-யில் உள்ளது. (அமெரிக்கா போனா ஒரு எட்டு அதையும் பார்த்துட்டு வந்துருங்க!)

6. கண்ணன் பறித்ததே இரண்டு மாங்காய்கள்தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும்!

7. ''this' is a pronoun!' என்பதுதான் ராஜு சொன்ன பதில். 'திஸ் என்பது என்ன?' என்பதுதான் தனக்கான முதல் கேள்வி என நினைத்து அதற்குப் பதில் சொல்லிவிட்டான் ராஜு.

8. 'அது தரப்படும் வாளியின் அளவைப் பொறுத்தது!' என்பதுதான் மோகன் சொன்ன பதில். கொஞ்சம் யோசியுங்கள்... கிணறும், வாளியும் கண் முன் இல்லாமல், அந்தக் கேள்விக்குச் சரியான விடை என்று ஏதாவது இருக்கிறதா? அதனால், அந்த சமயோசித விடைக்கு வேலை கிடைத் தது!

9. 545+5=550 அல்லது 5+545=550.

10. அந்தப் பொருள் பிளாஸ்டிக் நம்பர் பிளேட். 1, 2 , 1 - 2, 1 - 4 - 4

11. மின்சார ரயில் (எலெக்ட்ரிக் டிரெயின்) செல்லும்போது புகை விடாது தோழர்களே!

12. சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. ஆனால், இன்னொன்று 50 பைசா நாணயம் அவ்வளவுதான்!

13. பூனை தீப்பிடித்த காலால் ஓட முடியாது. பஞ்சு எரிந்து நாசமாகக் காரணம் பூனையை ஓடச் செய்தது மீதி மூன்று கால்களும்தான். அதனால் அந்தக் கால்களின் உரிமையாளர்கள்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பது லாஜிக்!

No comments:

Post a Comment