Friday, December 30, 2011

கலிலியோ கலிலீ - விஞ்ஞானி - இத்தாலி


கலிலியோ கலிலீ (Galileo Galilei) இத்தாலி நாட்டிலுள்ள பைசா நகரத்தில் கி.பி.1564 - ஆம் ஆண்டு பிப்ரவரி 15 - ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை வின்சென்சோ கலிலீ. சிறந்த இசைமேதை. கலிலியோ ஆறு பிள்ளைகளில் மூத்தவர்.
முற்காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிவைத்தபடி ஆண்களுக்கு 32 பற்கள் உண்டு என்றும், பெண்களுக்கு 28 பற்கள் தான் உண்டு என்றும் நம்பிவந்தனர். அதையே, கலிலியோவின் பள்ளியிலும் பாடமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். கலிலியோ அதை பரிசோதனை செய்துபார்த்தார். வீட்டில் அவரது அம்மா மற்றும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பற்களையும், ஆண்களின் பற்களையும் எண்ணிப்பார்த்து அரிஸ்டாட்டில் கூறியது தவறு. ஆண், பெண் அனைவருக்கும் 32 பற்கள் உண்டு என்ற உண்மையைக் கூறினார்.
கலிலியோவின் தந்தை அவரை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் பைசா நகரத்திலுள்ள பைசா பல்கலைக்கழகத்தில் (University of Pisa) 1581 - ல் சேர்ந்தார். கலிலியோவுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை, கணிதத்தைக் கற்றார். இயல்பிலேயே கலிலியோவுக்கு இயந்திர இயலிலும், இசையிலும், ஓவியத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.
ஒருநாள் மாதாகோயிலின் கூரையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். விளக்கு வேகமாக ஆடினாலும், மெதுவாக ஆடினாலும் ஒருமுறை ஆடுவதற்கு ஆகும் நேரம் ஒரே அளவாக இருப்பதைக் கண்டார். கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது. 
அக்காலத்தில் மருத்துவர்கள் இதயத்தின் துடிப்பை நாடிபிடித்து அறிந்தனர். அவர்கள் நேரத்தை கணக்கிட சிரமப்பட்டனர். மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் கலிலியோ கடிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தார். மருத்துவம் செய்யாவிட்டாலும், மருத்துவத்துறைக்கு சேவை செய்தார். அதுபோல், உடலின் வெப்பத்தைக் கணக்கிடும் வெப்பமானியையும் கண்டுபிடித்தார்.
கணிதக்கலையில் மிகுந்ததிறமை பெற்றிருந்த கலிலியோ அவர் பயின்றுவந்த பைசா பல்கலைக்கழகத்திலேயே 1589 - ஆம் ஆண்டு கணித ஆசிரியராக பதவியேற்றார். அக்காலத்தில் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகளே அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டன. எதையும் சோதனை செய்துபார்க்கும் கலிலியோ, அரிஸ்டாட்டில் கண்ட முடிவுகளிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
இரண்டு பொருட்கள் ஒரே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அவற்றுள் எடை அதிகமான பொருள்தான் முதலில் தரையில் விழும் என அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். இதை கலிலியோ மறுத்தார். பொருட்கள் அனைத்தும் ஒரே உயரத்திலிருந்து விழுந்தால் ஒரே சமயத்தில் அவை தரையை அடையும் என்று கூறினார்.
இதை நிரூபிக்க 1590 - ஆம் ஆண்டு மக்களையும், அறிஞர்களையும் பைசா நகரத்து கோபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அனைவரையும் கீழே நிறுத்திவிட்டு கலிலியோ மேலே சென்றார். உச்சியிலிருந்து இரண்டு குண்டுகளை ஒரே சமயத்தில் தரையை நோக்கிப் போட்டார். ஒரு குண்டின் எடை 450 கிராம். இன்னொரு குண்டின் எடை 4500 கிராம். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன. கோபுரம் சாய்ந்த கோபுரம் என்பதால் கலிலியோவால் எளிதாக விளக்கிக் காட்ட முடிந்தது. ஆனாலும், மக்கள் கண்ணால் கண்டும் அவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனாலும், சோதனை செய்து முடிவுகளை ஏற்கவேண்டும் என்ற கொள்கை வளர இது அடிகோலியது. இதுபோல் சாய்வுகளிலும் பந்துகளை உருளவிட்டு பரிசோதித்து பார்த்தார். தனது முடிவுகளை ஆன் மோஷன் (On Motion) என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
அந்நாளில் லெக்ஹாரன் என்னும் துறைமுகத்தில் மணல் மிகுதியாக நிறைந்திருந்தது. கப்பல் தங்குவதற்கு அது இடையூறாக இருந்தது. அறிஞர் ஒருவர் மணல் அள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். கலிலியோ அது பயன்படாது என்று கூறிவிட்டார். அது உண்மையிலேயே பயன்படாது போய்விட்டது. அந்த அறிஞரும் மக்களும் கலிலியோ மீது வெறுப்பு கொண்டவர்களாக இருந்தனர்.
கலிலியோ 1592 - ல் பதுவா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்தபோது அருகிலுள்ள அர்செனல் (Arsenal) துறைமுகத்திற்கு பொழுது போக்காக செல்வார். அங்கு வந்திருந்த வெனிஸ் கப்பல் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தது. கலிலியோ கப்பல் இயந்திரங்களின் செயல்பாடுகள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1593 - ல் ஒரு கப்பலின் துடுப்பு வலிக்கின்ற சுக்கானின் நெம்புகோலின் இயங்கா நிலைபுள்ளி (Fulcrum) பழுதடைந்தது. கலிலியோ ஒரு நீரேற்றியை (Pump) உருவாக்கி அந்தப் பிரச்சனைக்கு தீர்வுகண்டார். ஒரு குதிரை சக்திக்கொண்ட அந்த நீரேற்றியின் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். இவையல்லாமல் பல இயந்திரக் கண்டுபிடிப்புகளை கலிலியோ கண்டுபிடித்தார். ஆனாலும், அவரது கண்டுபிடிப்பில் தலையானது அவர் தொலைநோக்கி கருவியை (Telescope) கண்டுபிடித்தது தான்.

1604 - ஆம் ஆண்டில் வானில் ஒரு புதிய விண்மீன் காணப்பட்டது. வானநூல் அறிஞர்களுக்கு அது என்னவென்று திட்டமாக தெரியவில்லை. சிலர் அதை ஓர் புதிய கிரகம் என்றும் சிலர் அது ஒரு வால் நட்சத்திரம் என்றும் கூறினர். ஆனால், அது கிரகங்களுக்கு அப்பாலுள்ள ஒரு விண்மீன் என்று கலிலியோ நிரூபித்தார். அதன்பிறகு வானவியலில் அவரது கவனம் சென்றது. வானவியல் தொடர்பான அவரது உரையை கேட்க மக்கள் பெருந்திரளாக வந்தனர்.

அக்காலத்தில் ஹாலந்து நாட்டில் மூக்குக்கண்ணாடி வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடமிருந்த குவிவில்லை மற்றும் குழி வில்லைகளை வைத்து அவரது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் குவிவில்லையை கண்ணருகிலும் குழிவில்லையை சற்று தூரத்திலும் பிடித்துக் கொண்டு தூரத்திலுள்ள மாதாகோவிலை பார்த்தான். அப்போது அக்கோயில் கோபுரம் வெகு அருகில் தெரிந்தது. பையன் சந்தோசத்தில் கூச்சல் போட்டான். அவனது தந்தை வந்து பார்த்திருக்கிறார். அவருக்கும் மாதாகோயில் அருகில் தெரிந்தது. இந்தச் செய்தியை கேள்வியுற்ற கலிலியோ ஒரு குவிவில்லையையும், ஒரு குழிவில்லையையும் முன்னும் பின்னும் நகர்த்தக் கூடியவகையில் அமைத்து தொலை நோக்கியை செய்தார். உலகில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட தொலைநோக்கி இதுதான். இது 1609 - ல் நடந்தது.

இதைத் தொடர்ந்து பல தொலைநோக்கிகளை உருவாக்கினார். நான்காவது தயாரித்த தொலைநோக்கியைக் கொண்டு சந்திரனை ஆராய்ந்தார். சந்திரனில் பூமியில் உள்ளதுபோல் மேடுபள்ளங்களும், மலைகளும் தெரிந்தன. சந்திரனின் மேல்பகுதி வளவளப்பாக இல்லை என்பதைக் கண்டார். மேலும், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும், சனிகிரகத்தைச் சுற்றி வளையங்கள் உள்ளதையும், வியாழன் கிரகத்தை நான்கு சந்திரன்கள் சுற்றுகின்றன என்பதையும் கண்டுபிடித்து கூறினார்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். 1932 - ல் இரண்டு முக்கியமான உலகங்களின் உரையாடல் (Dialogue Concerning the Two chief world systems) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

கலிலியோவின் விரோதிகள் அவருக்கு எதிராகச் செயல்பட்டனர். சமயப் பெரியவர்களின் கருத்துக்கு எதிரான பல உண்மைகள் அதில் இருப்பதாக குற்றம் சாட்டினர். எனவே, 1633 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாள் கிறிஸ்தவத் திருச்சபை முன் நிறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அவர் நமது வேதநூல் பரலோக வாழ்வை அடைவதற்கான வழியைக் காட்டுகிறதே தவிர வானில் உள்ள அற்புதங்களை விளக்குவதன்று என்று வாதிட்டார். ஆனால், இந்த வாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. கலிலியோவுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 22 நாட்கள் சிறையிலிருந்த பின் கலிலியோ விடுவிக்கப்பட்டு வியன்னா நகருக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் வறுமையால் பீடிக்கப்பட்டு, கண்களை இழந்து குருடரான அவர் தனது 78 ம் வயதில் மரணமடைந்தார்.

கலிலியோவுக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள் இருவரும் கிறிஸ்தவ துறவற சகோதரிகளாக சேர்ந்தனர். சகோ. செலஸ்டி மற்றும் சகோ. அர்காஞ்சலா தான் அந்த இருவர். ஒரு மகன் வின்சென்சியோ.

No comments:

Post a Comment